
நீலகிரியில் நாளை (ஏப்ரல் 1) தொடங்கி, ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகமண்டலம், கோத்தகிரி எனப் புகழ்பெற்ற மலை வஸ்தலங்கள் உள்ளதால், கோடை காலத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறப்பட்டது.
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்திற்குள் பிற மாநில மற்றும் மாவட்ட வாகனங்கள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி கடந்தாண்டு மே 7-ல் இ-பாஸ் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நாளை (ஏப்ரல் 1) தொடங்கி, அடுத்த மூன்று மாத காலத்திற்கு (ஏப்ரல் முதல் ஜூன்) நீலகிரி மாவட்டத்திற்கு நுழையும் வெளி மாவட்ட, மாநில வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்குள் வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, நீலகிரி மாவட்ட பதிவெண் (TN-43) கொண்ட வாகனங்களுக்கும், சரக்கு வாகனங்களுக்கும், அரசுப் பேருந்துகளுக்கும், மருத்துவம் மற்றும் அவசர பணிகள் தொடர்பான வாகனங்களுக்கும் இ-பாஸ் நடைமுறையில் இருந்து தளர்வு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் விண்ணப்பிக்கவும், சரி பார்க்கவும், அது தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்கவும், மேலும் பல விவரங்களுக்கும் https:/epass.tnega.org/ என்ற இணையதளத்தை உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.