ஊட்டி, கொடைக்கானல் மலைப் பகுதிகளுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மே 7 முதல் செப்டம்பர் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளைச் சேகரிப்பதற்கு உதவும் வகையில் இருக்கும் என்பதால் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.
இதுதொடர்புடைய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக நேரில் ஆஜரானார். இவர்கள் தாக்கல் செய்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி ஆய்வு செய்தார்கள். அறிக்கையின்படி குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டுமே ஊட்டி, கொடைக்கானலுக்கு வந்துள்ளதை உணர்த்துவதாகக் கூறிய நீதிபதிகள், இரு மலைப் பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிவதாகத் தெரிவித்தார்கள்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, வாகன எண்களைப் பிரத்யேகமாகப் புகைப்படம் எடுக்கும் கேமராக்கள் இனிதான் பொருத்தப்படவுள்ளதால், இதன்பிறகுதான் சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இ-பாஸ் பெறாமல் எந்தவொரு வாகனமும் ஊட்டி, கொடைக்கானல் செல்ல முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள். மேலும், இ-பாஸ் விண்ணப்பத்தின்போது, உரிமம் பெற்ற தங்கும் விடுதியின் விவரங்களை இணைக்க முடியுமா என்பதையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இரு மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.