மழைநீர் வடிகால் வாரியத்தின் டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் இவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார். 2018-ல் சென்னை மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால், சாலைப் பணிகள், நடைபாதை அமைத்தல் பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் ரூ. 26.61 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் இதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் புகாரளித்தார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை முதற்கட்ட விசாரணை நடத்தியது. இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த 10 பொறியாளர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எஸ்.பி. வேலுமணி மீது பதிவு செய்யப்படும் 4-வது வழக்குப்பதிவு இது.