அமைச்சர் துரைமுருகன் மீதான பிடிவாரண்டை செப்டம்பர் 15 அன்று அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் துரைமுருகன் 2006-2011 காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராகச் செயல்பட்டார். 2007-2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மீது புகார் எழுந்தது.
2011-ல் துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி சாந்தகுமாரி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2017-ல் வேலூர் சிறப்பு நீதிமன்றத்தால் இருவரும் விடுவிக்கப்பட்டார்கள்.
வேலூர் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி சாந்தகுமாரி ஆகிய இருவரையும் விடுவித்த வேலூர் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
பிறகு, வழக்கானது சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி சாந்தகுமாரி நேரில் ஆஜராக வேண்டும் என பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான் இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாந்தகுமாரி மட்டும் நேரில் ஆஜராகி தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்தார். துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லை.
எனவே, சாந்தகுமாரியின் பிடிவாரணட்டை மட்டும் நீதிபதி திரும்பப் பெற்று உத்தரவிட்டார். துரைமுருகன் ஆஜராகததால் அவருக்கு எதிரான பிடிவாரண்டை அமல்படுத்த உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கானது செப்டம்பர் 15 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. செப்டம்பர் 15-க்குள் துரைமுருகன் நேரில் ஆஜரானால் கைது நடவடிக்கையிலிருந்து அவர் தப்பலாம்.
Duraimurugan | Chennai Special Court |