
தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் கொடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணமாக 1 ரூபாய் கூட வழங்கப்படாதது குறித்து பாப்பிரெட்டிபட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜன் கேள்வியெழுப்பினார். மேலும், அதிமுக ஆட்சியில் ரூ. 2,500 கொடுத்தபோது, ரூ. 5,000 கொடுக்க வேண்டும் என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரியதையும் இவர் நினைவுபடுத்தி பேசினார்.
இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணமாக அதிமுக கொடுத்தது தேர்தல் நேரத்தில் என்றார் அவர். மேலும், தற்போது தேர்தல் நடைபெறாததால் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் கொடுக்கப்படவில்லை என அவருக்கு உண்டாக நகைச்சுவைப் பாணியில் கூறியதாகத் தெரிகிறது. தேர்தல் சமயத்தில் பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணம் கொடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் பேசினார்.
துரைமுருகனின் இந்தப் பேச்சு நகைச்சுவையாக இருந்தாலும், தேர்தல் நேரத்தில் ரொக்கப் பணம் கொடுக்கப்படும் என்று கூறியது சர்ச்சைக்கும் வழிவகுத்துள்ளது.
இதனிடையே, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இதுகுறித்து விளக்கமளிக்கையில், "பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழ்நாடு அரசு ரூ. 280 கோடி ஒதுக்கியுள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ. 37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால் ரூ. 276 கோடி மட்டுமே கிடைத்தது. அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தில் ரூ. 2100 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை.
இதனால், மாநில அரசின் நிதியைக் கொண்டே அவை ஈடுகட்டப்படுகின்றன. இந்தக் காரணங்களால்தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 1000 வழங்க முடியவில்லை" என்றார்.