
மத்தியில் நாடாளுமன்ற ஆட்சி முறையையும், மாநிலங்களில் அதிபர் ஆட்சி முறையையும் செயல்படுத்துவதால் ஏற்படும் சாதக அம்சங்கள் குறித்து தன்னால் முன்பு எழுதப்பட்ட அறிக்கையை தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் கே.ஜி. அருண் ராஜ் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியும், விஜயின் நண்பராக அறியப்படுபவருமான அருண் ராஜ், அண்மையில் தவெக இணைந்ததை அடுத்து, அக்கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சியின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் பணியில் அவர் ஈடுபடுவார் என்று விஜய் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 10) விகடனுக்கு அளித்திருந்த பேட்டியில், இரட்டை ஆட்சி முறை குறித்துப் பேசியிருந்த அருண் ராஜ். அது தொடர்பாக கடந்த 2016-ல் தன்னால் எழுதப்பட்ட அறிக்கை ஒன்றையும் பகிர்ந்தார். அதில் கூறியதாவது,
`... நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், அதிபர் முறையைவிட நாடாளுமன்ற அரசாங்க முறையைத் தேர்ந்தெடுத்தனர், ஏனெனில் நாடாளுமன்ற ஆட்சி முறை ஏற்கனவே மக்களுக்கு நன்கு பரிச்சயமாகியிருந்தது.
இரண்டாவதாக, அதிகாரப் பகிர்வு காரணமாக அதிபர் முறை அரசு நிர்வாகத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் முட்டுக்கட்டைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக பிரிவினை உள்பட அனைத்து வேதனையான தியாகங்களுடனும் உருவான, ஒரு புதிய ஜனநாயகத்தால் இதைத் தாங்க முடியாது.
மத்தியில் நாடாளுமன்ற ஆட்சி முறையை இன்றைக்கும்கூட பொருத்தமாக உள்ளது; ஆனால் மாநில அளவில் அப்படி அல்ல. சுதந்திர காலத்தை ஒப்பிடும்போது தற்போது போதிய அளவிலான மக்களுக்கு எழுத்தறிவு உள்ளது. மேலும், மக்களிடையே அரசியல் மற்றும் ஆட்சி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
எனவே, மத்திய அளவில் நாடாளுமன்ற ஆட்சி முறையைத் தக்க வைத்துக்கொண்டு, மாநில அளவில் அதிபர் ஆட்சி (நேரடியாக மக்கள் முதல்வரை தேர்தெடுக்கும்) முறையை ஏற்படுத்தவேண்டும்.
மாநில அளவிலான அதிபர் ஆட்சி முறையில், அமெரிக்காவைப்போல, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை துறைகளுக்குத் தலைமையாக (அமைச்சர்களாக) நியமிக்கும் அதிகாரம் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது முதலமைச்சர் வசம் இருக்கும்.
மேலும், மாநில அளவில் அதிபர் ஆட்சி முறை இருந்தால், வாக்குகளை வாங்க பணத்தைப் பயன்படுத்துவது தடுக்கப்படும். அதன் மூலம் ஊழலைக் குறைக்க முடியும்...’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.