
`தேசியத்தில்தான் திராவிடம் இருக்கிறது, திராவிடத்தில்தான் தமிழகம் இருக்கிறது. அது குறித்து புதிய விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை’ என பேசியுள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
தவெக தலைவர் விஜய் குறித்தும், அவர் தெரிவித்த கருத்துகள் குறித்தும் இன்று (நவ.4) செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் பேசியவை பின்வருமாறு,
`தன்னுடைய எதிரி யார் என்பதை ஒவ்வொருவரும் அடையாளம் கண்டுதான் அரசியலுக்குள் வருகின்றனர். அந்த வகையில் விஜயும் தன்னுடைய கருத்தைக் கூறியிருக்கிறார். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இப்போதுதான் பிள்ளையார் சுழிபோட்டு, மாநாடு நடத்தியிருக்கிறார்.
இன்னும் அவர் கடந்துவர வேண்டிய பாதை ஏராளமாக இருக்கிறது. எனவே இனி வருங்காலங்களில் அவரது செயல்பாடுகளைப் பொருத்துதான் எல்லாம் இருக்கிறது. எங்கள் கட்சிதான் தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் என்று விஜய் கூறியதற்கான பதில். எங்கள் கட்சிப் பெயரிலேயே தேசியமும் இருக்கிறது, திராவிடமும் இருக்கிறது, தமிழகமும் இருக்கிறது.
அவற்றை முற்போக்கு சிந்தனையுடன் கொண்டு செல்வதுதான் தேசிய முற்போக்கு திராவிட கழகம். மிகப்பெரிய அளவில் கேப்டன் தமிழை நேசித்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எத்தனை திரைப்படங்கள் நடித்தாலும் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் அவர் நடிக்கவில்லை.
அன்னை மொழியை காப்போம் அனைத்து மொழியும் கற்போம் என்றுதான் இளைஞர்களுக்கு கேப்டன் கூறினார். தமிழ்தான் நமது தெய்வம், அன்னை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே எங்களைப் பொறுத்தவரை தேசியத்தில்தான் திராவிடம் இருக்கிறது. திராவிடத்தில்தான் தமிழகம் இருக்கிறது. இது நூற்றாண்டு காலமாக இருக்கின்ற விஷயம், எனவே அது குறித்து புதிய விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.
அவர் (சீமான்) திடீரென்று அந்நியனாகவும், திடீரென்று அம்பியாகவும் மாறுவார். இதற்கெல்லாம் நாம் பதில் கூறவேண்டியதில்லை. என் தம்பி என்றார், இப்போது எதற்கு லாரியில் அடிபட்டு சாவாய் என்கிறார். இவை அனைத்திற்கும் அவர்தான் பதில் கூறவேண்டும்’ என்றார்.