அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்.29) தமிழகத்தின் புதிய துணை முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், திராவிட மாடல் என்றால் வாரிசு அரசியல் என்று விமர்சித்துள்ளார் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியவை பின்வருமாறு:
`400 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக தியாகியாக இருந்து, வேலை வாங்கிக் கொடுப்பதற்காக பணம் வாங்கினோம் ஆனால் அவர்கள் புகார் அளித்தவுடன் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டோம் என்று கூறிய ஒரு முன்னாள் அமைச்சர் மீண்டும் அமைச்சராக இருக்கிறார் என்ற செய்தியைப் பார்க்கிறோம்.
திமுக 2021-ல் ஆட்சிக்கு வந்தபிறகு திராவிட மாடல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அதற்கு அவர்கள் சமூக நீதி, சமத்துவம், பெரியாரிய சிந்தனை என்று பல்வேறு விளக்கங்களை அளிக்கின்றனர். ஆனால் திராவிட மாடல் என்றால் எங்களைப் பொறுத்தவரை வாரிய அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியல், ஊழலுக்குத் துணைபோகும் அரசியல்.
தன்னுடைய அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை வைத்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேர்மையான ஆட்சியைத் தருகிறேன் என்று எப்படிக் கூறமுடியும்? இன்று தமிழக அமைச்சர் ஒருவர், வாரிசு அரசியலில் ஈடுபடாதவர்கள் வாரிசு அரசியலைப் பற்றி பேசலாம் என்று கூறுகிறார்.
திமுக ஒரு காலத்தில் ஜனநாயக ரீதியான கட்சியாக இருந்தது. உட்கட்சி ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாக்கும் ஒரு இயக்கமாக அந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. எளிய மனிதர்கள் கூட அந்தக் கட்சியின் உயர்ந்த பொறுப்புக்கு வருவதையெல்லாம் 30 வருடங்களுக்கு முன்பு சாதாரணமாகப் பார்க்க முடிந்தது.
இன்று திமுகவில் ஐம்பது, அறுபது ஆண்டுகள் உழைத்தவர்கள் எல்லாம் எங்கே ஓர் ஓரத்தில் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக அந்தக் குடும்ப வாரிசுகள் மட்டுமே மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்புக்கு வந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் இதுதான் திராவிட மாடலா?