இன்று (ஆகஸ்ட் 24) காலை பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டைக் காணொளி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். காணொளியில் முதல்வர் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு:
`இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இலவச அறுபடை வீடு ஆன்மீக சுற்றுப்பயணத்துக்கு இதுநாள் வரை 813 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
திடீரென பழனியில் மாநாடு நடத்தவில்லை, பல பணிகளை செய்த பிறகே இந்து சமய அறநிலையத்துறையால் பழனியில் மாநாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருக்காது.
அனைவரின் நம்பிக்கைக்கும் நன்மை செய்யும் அரசாக செயல்பட்டு வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டதே திராவிட மாடல். திமுகவின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் ஆட்சியில் பழுத்த ஆத்திகரான அன்றைய முதல்வர் பனகல் அரசரால் இந்து சமய அறநிலைய பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.
பண்பாட்டுச் சின்னங்களான கோவில்கள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று சீரோடும் சிறப்போடும் கோவில்கள் இயங்க அடித்தளம் அமைத்தது அந்த சட்டம்தான். கடந்த 3 ஆண்டுகளில் 1,358 திருக்கோவில்களில் குடமுழுக்கு, 8436 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். திருக்கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டப்படாத சமத்துவம் நிலவவேண்டும்’.