வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு

கைப்பேசி உரையாடல்கள், காணொளி ஆதாரங்கள், தடயவியல் அறிக்கைகளை கொண்டே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு
2 min read

வேங்கைவயலில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நேற்று (ஜன.24) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது தமிழக அரசு.

இது தொடர்பான செய்தி வெளியானதும், பட்டியல் சமூகத்தினரைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இந்த வழக்கை விரைவில் நடத்தி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பல்வேறு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது,

`புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறிப் பார்த்ததில், அதில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளானூர் காவல் நிலையத்தில் 26.12.2022 அன்று வழக்குப் பதிவு (Cr.No.239/2022) செய்யப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, இவ்வழக்கின் புலன் விசாரணையை 14.01.2023 அன்று தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, துணைக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

வழக்கு விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு, ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதைத்தவிர பலரது அலைபேசி எண்கள், தொலைத்தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. சில நபர்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, விரிவான டி.என்.ஏ. பகுப்பாய்வு செய்யப்பட்டது.

விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், பின்வரும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன:

`02.10.2022 கிராமசபைக் கூட்டத்தில் வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா, தமிழ்நாடு ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தத்தை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இதில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், கைபேசி உரையாடல்கள், காணொளி ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையில் புலன் விசாரணை முடிக்கப்பட்டது.

இதனை அடுத்து முரளிராஜா, த/பெ. ஜீவாநந்தம் சுதர்ஷன் த/பெ. பாஸ்கரன், முத்துகிருஷ்ணன் த/பெ. கருப்பையா ஆகியோரின் மீது 20.01.2025 அன்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in