`நாம் அனைவரும் மனிதர்கள், எனவே தயவு செய்து பெயரின் பின்னால் சாதிப் பெயரைச் சேர்க்க வேண்டாம்' என்று நாடார் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் பேசியுள்ளார் திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி. விழாவில் அவர் பேசியவை பின்வருமாறு:
`ஒரு ஐஏஎஸ் அதிகாரி, அவர் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவரது வகுப்பில் இருந்த தமிழ் மாணவர்களிடம், ஏன் தமிழ்நாட்டு மாணவர்கள் தனியாக இருக்கிறீர்கள்? எங்களுடன் இணைந்து செயல்பட எதனால் மறுக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.
அப்போது அந்தப் பள்ளி வகுப்பில் இருக்கும் பெயர்ப் பட்டியலை எடுத்துக்காட்டி, உங்கள் பெயரைப் பாருங்கள், எங்களின் பெயர்களைப் பாருங்கள். எங்களின் பெயர்களுக்குப் பின்னால் நாங்கள் மனிதர்கள், எங்கள் தந்தைகளின் பெயர்கள் என்று அத்துடன் நாங்கள் நிறுத்திக்கொண்டோம். ஆனால் உங்களின் பெயரைப் பாரத்தால் நீங்கள் எந்த சாதி, எந்த ஊர் என அனைத்தும் வெளிப்படையாகத் தெரிகிறது என்றனர்.
இது தந்தைப் பெரியாருடைய மண், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய மண், இந்த சாதி, மதம் என்று எந்தக் காழ்ப்புகளும், பிரிவுகளும் இருக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக தன் வாழ்நாள் எல்லாம் உழைத்த, கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய மண், தலைவர் கலைஞர் அவர்களுடைய மண்.
தயவுசெய்து மற்றொரு பத்திரிக்கையை இத்தனை சாதிப் பெயர்களுடன் அடிக்கவேண்டாம். நாம் அனைவரும் மனிதர்கள், அத்தனையையும் தாண்டி நாம் உழைப்பாளிகள், அதை மட்டுமே நம்பக் கூடியவர்கள். இதை எனது வேண்டுகோளாக உங்கள் அத்தனை பேரிடமும் வைக்கிறேன். இணைந்து செயல்படுவோம், தமிழர்களாக உயர்ந்து நிற்போம். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்றார்.