
இளைய காமராஜர் என்று அழைக்கவேண்டாம் என்றும், தேர்தல் அரசியல் குறித்து பேசவேண்டாம் என்றும், கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டவர்களிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்தார்.
தவெக சார்பில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களை கௌரவிப்பதற்கான கல்வி விருது வழங்கும் விழா, சென்னையை அடுத்த மாமல்லபுரம் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டனில் இன்று (ஜூன் 13) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின் தொடக்கத்தில் விஜய் பேசியதாவது,
`நேற்று குஜராத்தில் மிகப்பெரிய அளவில் சோகமான விமான விபத்து ஒன்று நடந்துள்ளது. அது தொடர்பான காணொளிகள், புகைப்படங்களைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை. இறந்தவர்கள் அனைவருக்காகவும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது) அனைவரும் தொலைவான இடங்களில் இருந்து வந்திருக்கிறீர்கள். அனைவரின் குடும்பத்தினரையும் தனித்தனியாக நான் சந்தித்து உரையாடுவேன். ஆனால் ஒரு சிறிய கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில், யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் பேச்சை மட்டும் சிறிது குறைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இதை நாம் இப்படியே தொடரலாம் நன்றி’ என்றார்.
இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் பெற்ற கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாணவரை கௌரவித்து, தங்க மோதிரம் அணிவித்தார் விஜய். அதன்பிறகு கார்த்திக்கின் தந்தை 2026 தேர்தல் குறித்தும், விஜய்க்கு வாக்களிப்பது குறித்தும் பேசினார்.
அவர் உரையை நிறைவு செய்ததும் மீண்டும் மைக் பிடித்து விஜய் பேசியதாவது,
`ஒரு சிறிய கோரிக்கை. 2026 பற்றியோ காமராஜர், இளைய காமராஜர் அப்படியெல்லாம் எதுவும் சொல்லவேண்டாம். உங்களுடைய ஆசிரியர்கள், உங்கள் பள்ளியைப் பற்றி பேசுங்கள், மற்ற விஷயங்களைப் பேசுங்கள், தயவுசெய்த இதைப்போல (அரசியல்) எதுவும் பேசவேண்டாம். நன்றி’ என்றார்.