
தமிழ்நாட்டைச் சேர்ந்த பனங்கற்கண்டு, பட்டறை கருவாடு, சீவல் என 3 உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கோரி சென்னை அறிவுசார் சொத்துரிமை மையத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம். இந்த அமைப்பு, ராமநாதபுரம் பனங்கற்கண்டு, ராமநாதபுரம் பட்டறை கருவாடு மற்றும் கோவில்பட்டி சீவல் ஆகிய உணவுப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்துள்ளது.
புவிசார் குறியீடு கிடைப்பதற்கு ஏதுவாக இந்த 3 உணவுப் பொருட்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் மதுரையில் செயல்பட்டு வரும் `நபார்ட் மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேட்டர் ஃபோரம்’ திரட்டியது. இதைத் தொடர்ந்து இவற்றுக்கான புவிசார் குறியீடு கோரி சென்னையில் உள்ள மத்திய அரசின் அறிவுசார் சொத்துரிமை (intellectual property india) மையத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளை மையமாக வைத்து பிரத்யேகமாக தயாராகும் உணவுப்பொருட்கள் புவிசார் குறியீட்டைப் பெறும் பட்சத்தில், வேறு பகுதிகளில் அதே பெயரிலான உணவுப் பொருட்களை தயாரிக்க முடியாது. புவிசார் குறியீடுகள் பொருட்களுக்கான தனித்துவமான அடையாளத்தைத் தரும்.
பனை மரங்கள் மிகுதியாக இருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில், சுமார் 300 வருடங்களுக்கும் மேலாக பனங்கற்கண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தின் வறண்ட தட்பவெப்ப நிலையைத் தாங்கி வளரும் பனை மரங்கள், இப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்காண மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.
அதுபோல ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் தயாராகும் மற்றொரு பிரத்யேக உணவு பட்டறை கருவாடாகும். கானாங்கெளுத்தி, வஞ்சரம், வாளை போன்ற மீன்களில் மஞ்சள், உப்பு ஆகியவற்றைத் தடவி சில நாட்கள் மண்ணுக்குள் புதைத்து கருவாடு உருவாக்கப்படும்.
அரிசி மாவில் சீரகம், ஓமம் ஆகியவற்றைக் கலந்து உருட்டி அவை ஒரே வடிவில் வெட்டப்பட்டு பொன் நிறத்தில் வரும்வரை எண்ணெயில் பொறித்து எடுத்து, கோவில்பட்டி சீவல் தயாரிக்கப்படும்.