அரசின் தவறுகளுக்கு அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா?: சீமான் கேள்வி

குறிப்பிட்ட பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவானது பள்ளிக்கல்வித்துறைக்குத் தெரியாமல் நடைபெறுகிறது என்றால் அதைவிட மோசமான நிர்வாகச் செயல்பாடு என்னவாக இருக்க முடியும்
அரசின் தவறுகளுக்கு அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா?: சீமான் கேள்வி
1 min read

அரசுப்பள்ளிகளில் சொற்பொழிவு நிகழ்ச்சியை அனுமதித்துவிட்டு, வெளியே தெரிந்து விமர்சனங்கள் எழுந்தவுடன் அரசு தப்பித்துக்கொள்ள ஒவ்வொரு முறையும் கடைநிலை அரசு ஊழியர்களைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா?’ என்று கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு:

`சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்கு விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மட்டும் பணியிடமாற்றம் செய்து திமுக அரசு தண்டித்துள்ளது கண்டனத்துக்குரியது.

குறிப்பிட்ட பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவானது பள்ளிக்கல்வித்துறைக்குத் தெரியாமல் நடைபெறுகிறது என்றால் அதைவிட மோசமான நிர்வாகச் செயல்பாடு என்னவாக இருக்க முடியும்? அத்தனையையும் அனுமதித்துவிட்டு, வெளியே தெரிந்து விமர்சனங்கள் எழுந்தவுடன் அரசும், அமைச்சகமும் தப்பித்துக்கொள்ள ஒவ்வொரு முறையும் கடைநிலை அரசு ஊழியர்களைப் பலியாக்குவது ஏன்?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் பலியாக்கப்பட்டனர். தற்போது தலைமையாசிரியர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடைபெற்றுள்ள நிகழ்வுகள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடைபெற்றது என்பதை எப்படி நம்ப முடியும்?

அரசு நிர்வாகத்தில் எத்தகைய தவறு நிகழ்ந்தாலும் அரசும், தொடர்புடைய துறையும் தங்களைத் தற்காத்துக்கொள்ள முனையாமல் தவறுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்று, மக்களிடம் மன்னிப்புக்கோருவதோடு, இனி அத்தவறுகள் நிகழாது என உறுதியளித்து அதன்படி செயல்படுவதுதானே ஒரு நல்ல அரசின் நேர்மையான நிர்வாக நடைமுறையாக இருக்க முடியும்?

சென்னை அசோக்நகர் பள்ளியின் தலைமையாசிரியர் அம்மா தமிழரசி அவர்களுக்கு வழங்கியுள்ள இடமாற்ற தண்டனையை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டுமெனவும், இனி இதுபோன்ற தவறுகள் நிகழாது மிக கவனமாகச் செயல்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் வாயிலாக வலியுறுத்துகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in