
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள திமுக இளைஞரணி பொறுப்பாளர் தெய்வச்செயல், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் திமுக இளைஞரணிப் பொறுப்பாளர் தெய்வச்செயல். இவர் கல்லூரி மாணவியை ஏமாற்றியதாகப் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக மே 19-ல் வெளியிட்ட அறிக்கையில், "இந்த வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறை, அரக்கோணம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சு. இரவி அவர்களிடம் மாணவி முறையிட்ட பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தன்னைப் போன்றே "20 வயதுள்ள 20 பெண்கள்" தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். "பொள்ளாச்சி பொள்ளாச்சி" என்று மேடைதோறும் கூவிய ஸ்டாலின் அவர்களே- "உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தானே?
பொள்ளாச்சி வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக சிபிஐ-க்கு மாற்றினேன்; நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்! தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!
20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது இந்த "டம்மி அப்பா" அரசு நடவடிக்கை எடுக்குமா? எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், திமுகவின் இளைஞரணிப் பொறுப்பிலிருந்து தெய்வச்செயல் விடுவிக்கப்படுவதாக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
"ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் தெய்வா (எ) தெய்வச்செயல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, ம. கவியரசு என்பவர் அப்பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்" என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.