
திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் இன்னும் பலவற்றை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஏறத்தாழ இரண்டரை மணி நேரத்துக்கு மேல் நிதிநிலை அறிக்கையை உரையை வாசித்தார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"நான்கு ஆண்டுகளாக எந்தவொரு புதிய பெரிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இன்றைய தினம் பட்ஜெட்டில் நிறைய புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்கள். ஆனால், இந்தத் திட்டங்களுக்குரிய நிதி எங்கிருந்து கிடைக்கும் எனத் தெரியவில்லை.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக சார்பாக சுமார் 525 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இதில் 15% அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை. முதல்வர் ஸ்டாலின் கடந்த 4 ஆண்டுகளில் 95% அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொய்யானச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதில் நிறைவேற்றப்படாத சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். அது இல்லை.
அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது இடம்பெறவில்லை.
தமிழக மாணவர்களுக்கு வங்கியில் வாங்கிய கல்விக் கடன் ரத்து என்று அறிவித்தார்கள். அதுவும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
கிராமப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள்களாக உயர்த்தப்படும் என்றார்கள். இன்றைய பட்ஜெட்டில் அதுவும் இடம்பெறவில்லை.
100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றார்கள். அதுவும் இடம்பெறவில்லை.
நெல் குயின்டாலுக்கு ரூ. 2,500 வழங்கப்படும், கரும்புக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 4,000 வழங்கப்படும் என்றார்கள். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. நாளைய வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறுமா என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலைக்கு மானியம் மாதம் ரூ. 100 வழங்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்தார்கள். அதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு முறையே ரூ. 5 மற்றும் ரூ. 4 குறைக்கப்படும் என்று அறிவித்தார்கள். பெட்ரோல் மட்டும் ரூ. 3 குறைத்தார்கள். இது மேலும் ரூ. 2 குறைக்கப்பட வேண்டும். டீசல் விலை இன்னும் குறைக்கப்படவில்லை. இந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
அனைத்து உணவுப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்றார்கள். அதுவும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
மின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு அதற்கேற்றவாறு கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றார்கள். அதுவும் இடம்பெறவில்லை.
ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்படும் சர்க்கரையின் அளவு கூடுதலாக 1 கிலோ வழங்கப்படும் என்றார். அதுவும் இடம்பெறவில்லை"
என்று எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார்.
அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால், ஆட்சிக் காலம் 9 மாதங்கள் மட்டுமே இருப்பதால் இன்றைய அறிவிப்பில் இடம்பெற்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்றார் எடப்பாடி பழனிசாமி. மடிக்கணினி திட்டத்தையும் உள்ளடக்கியே அவர் இதனைத் தெரிவித்தார்.