
`2026-ம் ஆண்டு தீய சக்தி திமுக வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும். அதற்கு 2025-ம் ஆண்டு முன்னோட்டமாக இருக்கும்’, என்று சேலத்தில் நடந்த பொங்கல் விழாவில் பேசியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், சேலம் மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த புத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த விழாவில் அவர் பேசியதாவது:
`இந்த பொங்கல் விழாவில் நானும் ஒரு விவசாயியாக பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. 2026-ம் ஆண்டு தீய சக்தி திமுக வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும். அதற்கு 2025-ம் ஆண்டு முன்னோட்டமாக இருக்கும்.
அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியதால், தொடர்ந்து 5 ஆண்டு காலம் உணவு தானிய உற்பத்தியில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்று, மத்திய அரசின் க்ரிஷி கர்மான் விருதைப் பெற்றோம். வேளாண் மக்களுக்குத் தேவையான உதவிகளை அதிமுக அரசு மேற்கொண்டது. அதிமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.
இன்றைய ஆட்சியாளர்கள், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தனர். அதை நம்பி மக்கள் வாக்களித்ததால் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகளில் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. தமிழகத்திற்கு ஒரு முதல்வர் என்றபோதும், திமுகவில் 4 முதலமைச்சர்கள் உள்ளனர்.
அதற்கு முடிவுகட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நன்மை கிடைக்கும் தேர்தலாக அது அமையும். கலப்பின கால்நடைகளால் கிராமங்களில் பொருளாதாரம் மேம்படும். அதற்காகக் கடந்த அதிமுக ஆட்சியில் கால்நடைப் பூங்கா திட்டத்தைக் கொண்டு வந்தோம். நேற்றைய தினம்தான் அதைத் திறந்திருக்கின்றனர்.
மூன்றரை ஆண்டுகள் ஆகியும் திறக்காத திமுகவினர் இன்றைக்கு நான் கேள்வி எழுப்புவேன் என்ற காரணத்துக்காக நேற்றைய தினம் திறந்துள்ளனர். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் ஏக்கரில் பிரம்மாண்டமான கால்நடை பூங்கா ஏற்படுத்திக் கொடுத்தோம்.
நேற்றைய தினம் அதைத் திறந்துவைத்துள்ளனர். ஆனால் அது இன்னமும் முழுமை பெறவில்லை. அது முழுமைபெற்றால் அதிமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால் அதனைக் கிடப்பில்போட்டனர்’ என்றார்.