
திமுக பொருளாளர் டி.ஆர். பாலு மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி பாலு காலமானார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலுவின் மனைவியும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி பாலு நுரையீரல் பாதிப்புக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
79 வயதான ரேணுகாதேவி கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஆக. 19) காலை அவர் காலமானார். இதைத் தொடர்ந்து மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், ரேணுகாதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் கூறியதாவது,
`கழகப் பொருளாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும் - என் ஆருயிர் நண்பருமான டி.ஆர். பாலுவின் மனைவியான ரேணுகாதேவி பாலுவின் மறைவால் வேதனையடைந்தேன்.
நண்பர் டி.ஆர். பாலுவுக்கும் – தம்பி டி.ஆர்.பி. ராஜாவுக்கும் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! எனது நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்து, அவர்களது கரம் பற்றி ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
சென்னை தியாகராய நகர் ராமன் சாலையில் உள்ள டி.ஆர். பாலுவின் இல்லத்தில் இன்று (ஆக. 19) மாலை இறுதி சடங்குகள் நடைபெறும் என்று டி.டி. நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.