2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஷோடைம் கன்சல்டன்சி நிறுவனம் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் உத்திகளை வகுப்பதற்காக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திடம் திமுக ஒப்பந்தம் செய்தது. தேர்தல் தொடர்பாக கூட்டணி உள்பட பல்வேறு முக்கிய முடிவுகளில் ஐபேக் நிறுவனம் பெரும் பங்காற்றியதாகக் கூறப்படுவதுண்டு. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைக் கைப்பற்றியது.
தொடர்ந்து, கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பென் நிறுவனமே தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தது. இதிலும் திமுக பெரும் வெற்றியைப் பெற்றது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில், ராபின் சர்மா தலைமையிலான ஷோடைம் கன்சல்டன்ஸி திமுகவுக்கு தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்த பென் நிறுவனம், ஷோடைம் கன்சல்டன்ஸி நிறுவனத்துடன் கைக்கோர்க்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராபின் சர்மா தலைமையிலான இந்த நிறுவனம் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்குத் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தது. மஹாராஷ்டிரத்தில் சிவசேனை (ஷிண்டே தரப்பு), மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சிக்கு ஷோடைம் கன்சல்டன்ஸி நிறுவனம் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்துள்ளது.