
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.
இன்று (ஜூலை 13) காலை 8 மணிக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார்.
இந்நிலையில் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 67,169 வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.
20 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அன்னியூர் சிவாவுக்கு 1,23,195 வாக்குகளும், பாமக வேட்பாளர் சி. அன்புமணிக்கு 56,026 வாக்குகளும், நாதக வேட்பாளர் அபிநயாவுக்கு 10,479 வாக்குகளும் கிடைத்தன. மேலும் நோட்டாவுக்கு 859 வாக்குகள் பதிவாகின. பாமக வேட்பாளர் சி.அன்புமணி தவிர்த்து நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா உட்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட்டை இழந்தனர்.
கடந்த 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். கடந்த ஏப்ரல் 6-ல் புகழேந்தி உடல்நலக்குறைவால் மரணமடைந்ததால் விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.