திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா தொடங்கியது

விழாவின் தொடக்கத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக உருவாக்கப்பட்ட மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இந்த விழாவுக்கான வாழ்த்துரையை வழங்கினார்
திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா தொடங்கியது
1 min read

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் தொடங்கியது.

விழாவின் தொடக்கத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக உருவாக்கப்பட்ட மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இந்த விழாவுக்கான வாழ்த்துரையை வழங்கினார்.

இந்த விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில், மண்டலவாரியாக திமுகவின் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட திமுகவினருக்கு நற்சான்றிதழையும், பண முடிப்பையும் வழங்கிக் கௌரவிக்கிறார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின்.

இதைத் தொடர்ந்து திருமதி பாப்பம்மாளுக்குப் பெரியார் விருதையும், அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு அண்ணா விருதையும், எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு கலைஞர் விருதையும், கவிஞர் தமிழ்தாசனுக்கு பாவேந்தர் விருதையும், வி.பி. ராஜனுக்கு பேராசிரியர் விருதையும், முன்னாள் மத்திய அமைச்சர் தஞ்சை எஸ்.எஸ். பழனிமாணிக்கத்துக்கு மு.க. ஸ்டாலின் விருதையும் வழங்கி கௌரவிக்கிறார் மு.க. ஸ்டாலின்.

தந்தை பெரியாரின் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், கட்சி தொடக்க விழா ஆகியவற்றை இணைத்து ஓவ்வொரு வருடமும் திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படும். இந்த வருடம் திமுக முப்பெரும் விழாவுடன், பவள விழாவும் கொண்டாடப்படுகிறது. விழா அரங்கம் செஞ்சிக் கோட்டை வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in