நீட் தேர்வு விலக்கு, முப்பெரும் விழா..: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் நீட் விலக்கு கோரிக்கையை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும்."
நீட் தேர்வு விலக்கு, முப்பெரும் விழா..: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
ANI

கோவையில் ஜூன் 14-ல் திமுகவின் முப்பெரும் விழா கொண்டாடப்படும் என எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் நாடாளுமன்றக் குழுத் தலைவர், மக்களவைக் குழுத் தலைவர், மாநிலங்களவைக் குழுத் தலைவர், கொறடா ஆகியப் பொறுப்புகளுக்கு தலைவர்களை நியமித்து வருகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி இன்று ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வரிசையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை கூடியது. இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

கோவையில் திமுகவின் முப்பெரும் விழாவைக் கொண்டாடப்படுவது உள்பட முக்கிய அம்சங்கள் அடங்கிய 5 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு, மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்க மற்றும் முதல்வருக்குப் பாராட்டு விழா என ஜூன் 14-ல் கோவையில் முப்பெரும் விழாவை நடத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறையை முழுமையாக விலக்க வேண்டும் அல்லது நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் இந்தக் கோரிக்கையை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நலனுக்காகவும், திட்டங்களுக்காகவும் குரல் கொடுப்பது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in