
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் திமுக மேற்கொண்டுவரும் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையின்போது பொதுமக்களிடம் இருந்து ஓடிபி பெறுவதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை பிறப்பித்துள்ளது.
மாநிலம் முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை முகாமை வீடுவீடாக திமுக நடத்தி வருகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம்களின்போது பொதுமக்களிடம் ஆதார், கைப்பேசி எண்கள் ஆகியவற்றை பெற்று அதன்பிறகு கைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபியையும் அவர்கள் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆதார் விவரங்களும் ஓடிபியும் பெறுவதால் பொதுமக்களின் தனியுரிமை மீறப்படுவதாகக் குறிப்பிட்டு, திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு நடவடிக்கையை எதிர்த்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு தனது மனுவில் ராஜ்குமார் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன், மரிய கிளாட் அமர்வு முன்னிலையில் இன்று (ஜூலை 21) விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொதுமக்களிடம் ஆதார் எண்களையும், அவற்றின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் ஓடிபிகளையும் திமுகவினர் கேட்பதாகவும், உறுப்பினராக இணையவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காது என்று மிரட்டுவதாகவும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.
இதன்பிறகு, உறுப்பினர்கள் சேர்க்கையை திமுக தொடரலாம்; ஆனால் ஓடிபி தொடர்பான விவரங்களை பொதுமக்களிடம் கேட்கக்கூடாது என்று கூறி ஓடிபி கேட்பதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தையும் இணைத்த நீதிபதிகள் இது விவகாரம் தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.