
நாடாளுமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரால் (சிஐஎஸ்எஃப்) தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரிடம் புகாரளித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (18/6/24) நடந்த சம்பவம் என்னை அதிரச்சியடையச் செய்துள்ளது. இதை உங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். பிற்பகல் 2.40 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழையும்போது சிஐஎஸ்எஃப் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டேன். மக்கள் நலன் மற்றும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக இருக்கும் என்னிடம் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான நோக்கம் குறித்து கேள்வியெழுப்பினார்கள்.
சிஐஎஸ்எஃப் அதிகாரிகளின் இந்தச் செயல் என்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நாடாளுமன்ற பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்தபோது, இதுமாதிரியான சம்பவங்கள் நடந்ததே இல்லை.
அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் ஏதும் இல்லாத நேரத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்லலாம் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன். ஏதேனும் நிகழ்வுகள் இருந்தாலும், அதை மாநிலங்களவைத் தலைவரிடம் தெரிவிப்பதற்கு மட்டுமே நான் கடமைப்பட்டுள்ளேன்.
சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் என்னிடம் கேள்வியெழுப்பிய விததத்தை என்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்துள்ளது.
இந்த விஷயத்தைக் கவனத்தில்கொண்டு, தவறிழைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து, மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தை நிலைநாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.