முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் விலை 75% குறைவு: எழிலன்

"தனியார் மருந்து கடைகளில் முறையாக மாதம் ரூ. 3,000-க்கு மருந்துகளை வாங்கினால், முதல்வர் மருந்தகத்தில் அதை ரூ. 1,000-க்கு வாங்கிவிடலாம்"
முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் விலை 75% குறைவு: எழிலன்
படம்: https://x.com/DMKITwing
1 min read

வெளிச் சந்தையில் ரூ. 70-க்கு கிடைக்கு மருந்துகள் முதல்வர் மருந்தகத்தில் ரூ. 11-க்கு கிடைக்கும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன் தெரிவித்துள்ளார்.

78-வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், புதிதாக முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தார். இந்தத் திட்டத்தின் படி முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B-Pharm/D-Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலோடு மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் தமிழக கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன், விலை குறையும் சதவீதம் குறித்து விளக்கமளித்தார்.

"முதல்வரின் மருந்தகம் என்கிற அருமையான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ளார். இதை மக்களின் பயன்பாடு, தொழில்முனைவோர்களுக்கான திட்டம், மருத்துவத் துறையில் வரலாறு என்று மூன்று விதமாக இந்தத் திட்டத்தைப் பார்க்கலாம்.

தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வோர் 50 முதல் 60 சதவீதம் பேர் உள்ளார்கள். அங்குள்ள மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கும்போது பெரியளவில் பொருளாதார சுமைக்கு ஆளாகிறார்கள். இந்தச் சுமையை வெகுவாகக் குறைப்பதற்காக, தனியார் மருத்துவமனைகளில் அல்லது தனியார் மருந்து கடைகளில் வாங்கும் மருந்துகள், முதல்வர் மருந்தகத்தில் வாங்கும்போது ஏறத்தாழ 75 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைந்த விலைக்குக் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக 1,000 கடைகளை முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்.

விலை குறைவாக கிடைக்கும் என்பதற்கான சிறிய உதாரணம், நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் மெட்ஃபார்மின் (30 மாத்திரைகள்) விலை வித்தியாசங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

  • முதல்வர் மருந்தகத்தின் விற்பனை விலை - ரூ. 11

  • மத்திய அரசின் பிரதமர் மருந்தகத்தின் விற்பனை விலை - ரூ. 30

  • தனியார் மருந்தகத்தின் விற்பனை விலை - ரூ. 70

தனியார் மருந்து கடைகளில் முறையாக மாதம் ரூ. 3,000-க்கு மருந்துகளை வாங்கினால், முதல்வர் மருந்தகத்தில் அதை ரூ. 1,000-க்கு வாங்கிவிடலாம்" என்றார் எழிலன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in