2014-ல் ரூ. 400-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை, ரூ. 1,100-க்கு விற்பனையாகிறது: உதயநிதி

இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால், சமையல் எரிவாயுவின் விலை ரூ. 500 ஆகக் குறைக்கப்படும்.
2014-ல் ரூ. 400-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை, ரூ. 1,100-க்கு விற்பனையாகிறது: உதயநிதி
படம்: https://twitter.com/Udhaystalin

தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனியில் இன்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

"கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார்? அவர் வந்தபோதெல்லாம் தமிழ் மொழியின் பெருமை குறித்தும், திருக்குறள் குறித்தும் பேசுகிறார். ஆனால், பாஜக உண்மையில் நம் மொழி உரிமைகளைப் பறித்துள்ளது.

ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு அனுமதிக்கப்படவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு, பாஜக மீதுள்ள பயத்தால் நீட் தேர்வை அனுமதித்தது அடிமைக் கூட்டம் (எடப்பாடி பழனிசாமி அரசு). இதன் விளைவாக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அவரைத் தொடர்ந்து, நீட் தேர்வு அச்சத்தால் இதுவர 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். இவை தற்கொலை கிடையாது. அதிமுக மற்றும் பாஜக செய்த கொலை. தற்போது இருவருக்கிடையே கூட்டணி இல்லாததைப்போல நடிக்கிறார்கள்.

2014-ல் சமையல் எரிவாயு விலை ரூ. 400. தற்போது ரூ. 1,100-க்கு விற்பனையாகிறது. தேர்தலுக்கு முன்பாக சமையல் எரிவாயுவின் விலையை பாஜக ரூ. 100 குறைக்கப்படுவதாக அறிவித்தது. இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால், சமையல் எரிவாயு ரூ. 500-க்கும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 75-க்கும் விற்பனையாகும் என ஸ்டாலின் வாக்குறுதியளித்துள்ளார். இதுமட்டுமல்ல, நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அனைத்து சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்" என்றார் உதயநிதி ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in