அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்பு

ஏற்கெனவே பதவி வகித்த உயர் கல்வித்துறை பொன்முடிக்கு ஒதுக்கீடு...
அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார் பொன்முடி.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த 11-ல் நிறுத்திவைத்தது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த சிறைத் தண்டனையை மட்டுமே உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததாகத் தகவல்கள் வெளியாகின. எனினும், தீர்ப்பின் நகல் வெளியானவுடன் குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது உறுதியானது. இதைத் தொடர்ந்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க பதவிப் பிரமாணம் செய்துவைக்குமாறு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். முதல்வர் கடிதம் எழுதிய மறுதினமே ஆளுநர் ஆர்.என். ரவி தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். இதனால், பொன்முடி அமைச்சராவதில் தாமதம் ஏற்பட்டது. பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இதில் பொன்முடி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது உச்ச நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்படவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பொன்முடியை உயர்கல்வித் துறை அமைச்சராக நியமிப்பதற்கான முதல்வரின் கோரிக்கையை ஏற்க ஆளுநர் மறுத்திருப்பது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 164(1)-ஐ அப்பட்டமாக மீறும் செயல் என தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் பொன்முடிக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பது தொடர்பான வழக்கில் பதிலளிக்க ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, ஒருநாள் அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம். ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினால், ஜனநாயக முறைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த பின்னர் நீதிமன்ற உத்தரவை மதித்து பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பது ஏன் என்று பல கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் தனக்குத் துளியும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி தரப்பு விளக்கம் அளித்தது. மேலும் அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்க பொன்முடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டதால் இந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார் பொன்முடி. எளிய முறையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். ஆளுநருக்குப் பூங்கொத்து வழங்கினார் அமைச்சர் பொன்முடி. ஏற்கெனவே பதவி வகித்த உயர் கல்வித்துறை பொன்முடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in