மீண்டும் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம்: ஜோதிமணி

திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

திமுகவும் வலிமையாக இருப்பதால், எங்களுடைய கூட்டணியும் வலிமையாக இருப்பதால் இந்த முறையும் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் (புதுச்சேரி தவிர்த்து) காங்கிரஸ் போட்யிடுகிறது. இதில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தார். இதனிடையே, கரூர் வேட்பாளர் ஜோதிமணி, கன்னியாகுமரி வேட்பாளர் விஜய் வசந்த், கடலூர் வேட்பாளர் எம்கே விஷ்ணு பிரசாத் ஆகியோர் சத்தியமூர்த்தி பவனில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசினார்கள்.

ஜோதிமணி:

"எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுப்பதை மட்டுமே அமலாக்கத் துறை பணியாகச் செய்து வருகிறது. அமலாக்கத் துறை நெருக்கடிக்குள்ளானவர்கள் பாஜகவில் இணைகிறார்கள். இதன்மூலம், அவர்களுடைய பாவங்கள் கழிக்கப்படுகின்றன.

திமுக ஓர் அமைப்பாக மிகவும் வலிமையாக இருக்கிறது. அவர்களுடனான எங்களுடைய கூட்டணியும் வலிமையுடன் உள்ளது. இந்த முறையும் மக்களிடமிருந்து மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம்" என்றார் ஜோதிமணி.

விஜய் வசந்த் கூறியதாவது:

"கன்னியாகுமரி மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம். ராகுல் காந்தி தனது ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்துதான் தொடங்கினார். இதேபோல கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வெற்றி பெற்றால் மட்டுமே இண்டியா கூட்டணி ஆட்சியமைக்க முடியும். இதன்மூலம், மக்களுக்கான அரசை திரும்ப கொண்டுவர முடியும்" என்றார் விஜய் வசந்த்.

எம்கே விஷ்ணு பிரசாத் கூறியதாவது:

"சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அனைத்து ஒத்த கருத்துடைய தலைவர்களின் ஆசியுடனும் நான் கடலூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் சீர்குலைப்பதற்கான போதுமான செயல்களை மோடி அரசு செய்துள்ளது. இதனால், நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்" என்றார் விஷ்ணு பிரசாத்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in