அனைத்துக் கட்சிக் கூட்டம்: தவெகவுக்கு திமுக அழைப்பு! | SIR | DMK | TVK |
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்புடைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இதனிடையே, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த அக்டோபர் 27 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் மற்றும் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2 அன்று மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதன் பகுதியாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக வெற்றிக் கழகத்துக்கு திமுக சார்பில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டது. பனையூரிலுள்ள தவெக தலைமைச் செயலகத்துக்குச் சென்றார் திமுகவின் தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் பூச்சி முருகன். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்புடைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்தை பூச்சி முருகன் வழங்கினார். தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்திடம் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தவெகவும் எதிர்ப்பு தான் தெரிவித்து வருகிறது.
நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்புடைய அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கும் திமுக சார்பில் தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தவெக சார்பில் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றார்.
SIR | Special Intensive Revision | DMK | All Party Meet | TVK |

