தம்பி விஜய் மாநாடு நடத்த இடத்தைக் கொடுப்பதில் உங்களுக்கு ஏன் பயம்? அவரது கட்சியைத் தடுப்பது போல அவரது திரைக் காட்சியையும் தடுப்பதாக நான் கேள்விப்பட்டேன் என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்துப் பேசினார் தமிழிசை சௌந்தரராஜன். இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:
`பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு என்ன நிதி கொடுக்க வேண்டுமோ அதில் ஏறத்தாழ 90 % நிதி கொடுக்கப்பட்டுவிட்டது. இதற்கு முந்தைய தலைமைச் செயலாளர் இந்த பி.எம். ஸ்ரீ திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம் எனவே திட்டத்துக்கான மூன்றாவது, நான்காவது தவணையை விடுவியுங்கள் என்று எழுதிவிட்டு இப்போது நாங்கள் அதை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று கூறினால் என்ன அர்த்தம்?
நான் ஏற்கனவே புதுச்சேரியில் நிர்வாகத்தில் இருந்திருக்கிறேன். ஒரு திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது என்றால் அந்த திட்டத்திற்காகத்தான் அந்த நிதியைப் பயன்படுத்த முடியும். அதற்காகப் பயன்படுத்துகிறோம் என்று எழுதிவிட்டு இன்று நாங்கள் பயன்படுத்தமாட்டோம் என்று கூறுவது சரி அல்ல. இந்த விவகாரத்தில் முற்றிலுமாகத் தவறு செய்தது திமுக அரசுதான்.
கார் ரேஸை அவ்வளவு விரைவாக நடத்த முடிகிறது. ஆனால் புதிய கட்சி தொடங்கி மாநாடு நடத்த அனுமதி கேட்டதற்கு அவர் விடுப்பில் சென்றிருக்கிறார், இவர் விடுப்பில் சென்றிருக்கிறார் என்று காரணம் தெரிவிக்கப்படுகிறது. எந்த அளவுக்கு நீங்கள் எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கிறீர்கள்? கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து பாஜக ஆர்ப்பாட்டம் செய்தபோது பெண்கள் கைது செய்யப்பட்டார்கள்.
எந்த ஒரு புதுக்கட்சியாக இருந்தாலும் மாநாடு நடத்த இடத்தைக் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை? இதைக் கேட்பதால் உடனே நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன் என்றில்லை. ஒரு கார் ரேஸை நடத்த எவ்வளவோ மாற்றங்கள் செய்யப்பட்டன. அவரும் பாவம் இடங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்.
இடத்தைக் கொடுப்பதில் ஏன் உங்களுக்கு அவ்வளவு பயம்? இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடித்துக்கொள்வார் என்று நினைக்கிறீர்களா? அவரது கட்சியைத் தடுப்பது போல அவரது திரைக் காட்சியையும் தடுப்பதாக நான் கேள்விப்பட்டேன். புதிய கட்சி வருவதாக இருந்தால் வரட்டும், யாருக்கு மக்கள் ஆதரவு அளிக்கிறார்களோ அது அவர்களின் விருப்பம்' என்றார்.