திமுகவுக்கு பயம் வந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி

கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நிலைமை திமுகவில் உள்ளது.
திமுகவுக்கு பயம் வந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி
2 min read

43 மாத கால ஆட்சியில் திமுக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. அதனால் அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது என அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அக்கட்சி அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியவை பின்வருமாறு,

`ஒவ்வொரு ஆண்டும் நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்றனர் திமுகவினர். அது குறித்து பேசிக்கொண்டே இருந்தனர். தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டனர். 43 மாத கால திமுக ஆட்சியில் 4 முறை சட்டமன்றம் கூடியுள்ளது. 400 நாட்கள் அவையை நடத்திருக்கவேண்டும். ஆனால் வெறும் 113 நாட்கள் மட்டுமே நடத்தியுள்ளனர். ஏனென்றால் அவர்களுக்கு பயம் வந்துவிட்டது.

அவர்களுக்கு எப்போது பயம் வந்ததோ, அப்போதே அதிமுக வெற்றி பெற்றுவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் மழைகால கூட்டத்தொடர் நடைபெறும். தற்போது அதை இரண்டே நாட்களில் நடத்திமுடித்து வரலாறு படைத்துள்ளது திமுக அரசு. அந்த இரண்டு நாட்களில், ஒரு நாள் மட்டுமே பேச வாய்ப்பளிக்கப்பட்டது.

அதிலும் அதிமுகவைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே, அதுவும் 10 நிமிடங்கள் வாய்ப்பளிக்கப்பட்டது. அதிமுகவைப் பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. 43 மாத கால ஆட்சியில் அவர்கள் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. அதனால் ஏற்பட்ட பயத்தால் தற்போது தடுமாறுகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் நான் பேசும்போது ஒளிபரப்பை நிறுத்திவிடுவார்கள். அதன்பிறகு என் கேள்விக்கு முதல்வர் பதில் கூறுவது ஒளிபரப்பப்படும். பின்னர் அது எப்படி மக்களுக்குப் புரியும்?

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் பேசுவதைக் காட்டுவதில்லை. அண்மையில் டங்கஸ்டன் சுரங்கம் குறித்துப் பேசினோம். அதை ஒரே நாள் மட்டும் ஒளிபரப்பினார்கள். ஆனால் அதில் ஆடிப்போய்விட்டார் ஸ்டாலின். நான்கு முறை சட்டமன்றம் நடந்தது. அவற்றில் நான் பேசியதை ஒளிபரப்பு செய்திருந்தால் திமுக அரசு இருந்திருக்காது. நீங்கள் இருட்டடிப்பு செய்தாலும், மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக இருக்கும். கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? மன்னராட்சியில்தான் மன்னருக்குப் பிறகு அவரது மகன் முடிசூட்டுக்கொள்வார். கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் முடிசூட்டிக்கொண்டார். இப்போது ஒரு வாரிசைக் கொண்டு வந்து முடிசூட்டுகிறார்.

ஸ்டாலினின் கனவு நிறைவேறாது. மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து கொல்லைப் புறத்தின் வழியாக தந்திரமாக அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால் தற்போது மக்கள் விழித்துக்கொண்டனர். 2026 அதிமுக ஆட்சி மலரும். குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அது இருக்கும்.

திமுகவினரே நொந்துவிட்டார்கள். திமுக அமைச்சர்கள் முகங்களில் பிரகாசமே இல்லை. ஏனென்றால் அக்கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. கருணாநிதி காலத்தில் அமைச்சராக இருந்தவர்கள் ஸ்டாலின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் துணை முதலமைச்சர் பதவி கிடையாது.

கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தினால் அவரை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். பிறகு அமைச்சராக்கினார்கள். பிறகு துணை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் இவ்வளவு பதவிகளும் கிடைக்கும் என்ற நிலைமைக்கு தி.மு.க வந்துவிட்டது.

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஆகிவிட்டது. குடும்ப உறுப்பினர்கள்தான் அங்கு ஆட்சி அதிகாரம் செலுத்த முடியும். அந்த நிலைமையை 2026-ல் மக்கள் மாற்றிக் காட்டப்பட்டுவார்கள்’ என்றார்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in