திமுக - விசிக கூட்டணி: திருமாவளவனும் ஸ்டாலினும் சொல்வதென்ன?

"நாம் திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், திமுக - விசிக கூட்டணி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பெரிதளவில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 மக்களவைத் தேர்தல் முதல் கடந்த மக்களவைத் தேர்தல் வரை இந்தக் கூட்டணி பெரிய சலசலப்பு இல்லாமல் பயணித்து வருகிறது. விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என திருமாவளவன் கூறியதும், விசிகவில் இருந்தபோது ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளும், ஆட்சியில் பங்கு என்று திருமாவளவன் பேசியதும் சற்று சலசலப்பை உண்டாக்கியது. ஆனால், திமுக கூட்டணியில் நீடிப்பது பற்றி திருமாவளவன் உறுதிபடத் தெரிவித்தார். ஆதவ் அர்ஜுனாவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் வேளச்சேரி தாய்மண் அலுவலகத்திலிருந்து திருமாவளவன் தொண்டர்களிடத்தில் ஃபேஸ்புக் நேரலையில் பேசினார். அதில் திமுகவை மட்டுமே தாங்கள் நம்பி இல்லை என்று பேசியிருந்தார்.

"நாம் திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்துச் செல்கிறோம் என்றாலும் கூட, இயக்கத் தோழர்கள் அதில் ஒரு தெளிவைப் பெற வேண்டும்.

தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது பெரிய விஷயம் இல்லை. எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதலான பேரம் கிடைக்கும் இடத்தில் உறவை வைத்துக்கொள்வது, கூட்டணியைத் தீர்மானிப்பது என்பது பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். நாம் அதைப் பொருட்படுத்தவில்லை. ஈடுபாடு காட்டவில்லை.

எந்த நிபந்தனையும் எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும், ஒரு தெளிவு வேண்டும், ஒரு தொலைநோக்குப் பார்வை வேண்டும். இதைப் புரிந்துகொள்ள முடியாத அற்பர்கள் நமக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்" என்றார் திருமாவளவன்.

இதனிடையே, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் அளித்திருந்தார். அதில் திமுக கூட்டணி பக்கம் பாமக வரலாம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக நோக்கி செல்லலாம் என்று வதந்திகள் பரவுவதாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "நீங்களே வதந்திகள் என்று கூறிவிட்டீர்கள். திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. கூட்டணிக் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in