திமுக முன்னாள் அமைச்சரும் பொன்னேரி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான க. சுந்தரம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 76.
திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக க. சுந்தரம் இருந்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதியில் இரு முறை வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குத் தேர்வானார். 1989-ல் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக இருந்தார். 1996-ல் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார்.
கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் உள்பட பல பொறுப்புகளை வகித்துள்ளார். 2022-ல் திமுகவில் ஆதிதிராவிட நலக் குழுத் தலைவராக க. சுந்தரம் நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் க. சுந்தரத்துக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.
இவருடைய மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"திமுகவின் ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான க. சுந்தரம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
க. சுந்தரம் பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராகவும், பால்வளத் துறை அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றியவர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த சுந்தரம் அவர்கள், கழகம் அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தீரமிகு செயல்வீரர். கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீஞ்சூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த காட்சிகள் இப்போதும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை. கடந்த ஆண்டு வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் க. சுந்தரத்தின் கழகப் பணிகளைப் பாராட்டி அண்ணா விருதினையும் வழங்கியிருந்தேன்.
திமுக பணியிலும், மக்கள் பணியிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்ட க. சுந்தரத்தின் மறைவு பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும் திமுகவின் உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.