

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கத் தீர்மானம் அளித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுதல் தொடர்பான வழக்கில், சிஐஎஸ்எஃப் படையினர் பாதுகாப்புடன் மனுதாரர் தீபமேற்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த டிசம்பர் 3 அன்று உத்தரவிட்டிருந்தார். ஆனால், மனுதாரர் தரப்பைக் காவல்துறையினர் தடுத்ததால் திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மதுரை மாவட்ட ஆட்சியர், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, தனி நீதிபதி சுவாமிநாதன் விசாரித்து அன்று மாலை மீண்டும் தீபமேற்ற உத்தரவிட்டார். ஆனால் அப்போதும் மனுதாரர் தரப்பைக் காவல்துறை தடுத்து நிறுத்தியது.
மேலும், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், இன்று மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லாவிடம் திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் பதவி நீக்கத் தீர்மானத்தை அளித்தார்கள்.
அரசமைப்பு விதிகளின்படி ஒரு நீதிபதிக்கு எதிரான பதவி நீக்கத்துக்கு விதி 124(4) வகை செய்கிறது. இதற்கு மக்களவையில் இருந்து குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையில் இருந்து 50 உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும்.
இந்த குறைந்தபட்ச ஆதரவு எட்டப்பட்டு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் மூவர் குழு நியமிக்கப்பட்டு அறிக்கை அளித்தவுடன் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் தொடர்பாக விவாதிக்க அனுமதிப்படும். அதன் முடிவில் வாக்குகெடுப்பு நடத்தப்படும். அதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்கு அளித்தால் அது தொடர்புடைய தீர்மானத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நீதிபதியை பதிவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார்.
DMK served an impeachment notice on Lok Sabha Speaker Om Birla demanding the removal of Judge G.R. Swaminathan, Madurai Branch of the Madras High Court.