வழக்கு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை. நெருக்கடியில் மத்திய இணையமைச்சர் ஷோபா
ANI

வழக்கு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை. நெருக்கடியில் மத்திய இணையமைச்சர் ஷோபா

ஷோபா மீது 4 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே அண்மையில் தெரிவித்திருந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை சைபர் கிரைம் காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மத்திய இணையமைச்சர் மீறியதாகக் குற்றம் சாட்டிய தமிழக ஆளும் கட்சியான திமுக, இது தொடர்பாக,  அமைச்சர் கரந்த்லஜே மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

மார்ச் 1 அன்று பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் குண்டு வைக்கப்பட்டது. இதற்காக தமிழகத்தில் பயிற்சி பெற்று இங்கு வெடிகுண்டுகளை வைக்கிறார்கள் என்று மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே, பெங்களூருவில் நேற்று பேசினார். இதற்குத் தமிழக முதல்வர் உள்பட பல அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

இதனால், மத்திய இணையமைச்சர் பின்னர் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக சமூக ஊடகம் மூலம் வெளியிட்ட செய்தியில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளை நான் மதிக்கிறேன். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் பேசவில்லை. ஒருவேளை எனது கருத்துகள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கிருஷ்ணகரி வனப்பகுதியில் பயிற்சிபெற்றவர்கள் என தெரியவந்ததால் நான் அவ்வாறு பேசினேன். எனது முந்தைய கருத்துக்களைத் திரும்பப் பெறுகிறேன்” என்று தெரிவித்தார்.

இதனிடையே மத்திய இணையமைச்சர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் கர்நாடக மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை வளர்க்கும் வகையிலும் பேசியுள்ளார். தேர்தல் நேரத்தில் நடத்தை விதிகளையும் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் 123 (3ஏ) மற்றும் 125 பிரிவுகளை மீறும் வகையில் பேசியுள்ள மத்திய இணையமைச்சர் ஷோபா மீதான புகார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக புகாரளித்துள்ளது. இதையடுத்து ஷோபா மீது நடவடிக்கை எடுக்க கர்நாடகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஷோபா மீது மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தியாகராஜன் என்பவர் புகாரளித்துள்ளார். இதனால் ஷோபா மீது 4 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in