போதைப் பொருள் கடத்தல் பணத்தின் மூலம் தேர்தலைச் சந்திக்கும் திமுக: இபிஎஸ்

"முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் திமுக தேர்தலைச் சந்திக்கவிருப்பதாகச் செய்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் கடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கும்பல் சிக்கியதிலிருந்து தமிழ்நாட்டில் போதைப் பொருள் குறித்த விவகாரம் பூதாகரம் ஆனது. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்தன. தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியும் போதைப் பொருள் புழக்கம் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். தமிழ்நாடு அரசு மற்றும் திமுக தரப்பிலிருந்து இதற்குத் தொடர்ச்சியாக விளக்கம் தரப்பட்டு வருகிறது.

போதைப் பொருள் தடுப்பு குறித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக சார்பில் ஏற்கெனவே போராட்டம் நடைபெற்ற நிலையில், தமிழக பாஜகவும் நாளை மறுநாள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று நேரில் சந்தித்தார். தமிழ்நாட்டில் நிலவி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்து அவரிடத்தில் விரிவான அறிக்கையை சமர்ப்பித்து, அதைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தினார்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

"தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் உள்ளது. தமிழகம் போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி தமிழகமே சீரழியக்கூடிய சூழல் ஏற்படும் என்பதை ஆளுநரிடம் குறிப்பிட்டோம்.

ஏற்கெனவே நான் பலமுறை ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்த நேரங்களிலெல்லாம், ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் குறித்தும் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் குறிப்பிடுவேன். விடியா திமுக அரசு அலட்சியத்தின் காரணமாக, சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் போதைப் புழக்கம் அதிகரித்து, ஒரு போதை மாநிலமாக இருந்து வருகிறது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அதுதொடர்பாக விளக்கமான அறிக்கையையும் அவரிடத்தில் சமர்ப்பித்துள்ளோம். அண்மையில் திமுக சென்னை மேற்கு மாவட்டத்தின் அயலக அணியின் துணை அமைப்பாளராக இருக்கக் கூடிய ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அவரைக் கைது செய்துள்ளார்கள். 3 ஆண்டுகள் அவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்றும், பல்வேறு நாடுகளுக்கு 45 முறை போதைப் பொருள்களைக் கடத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவரைக் கைது செய்தவுடன் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் ஊடகத்தின் வாயிலாகத் தெரிவிக்கையில், ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு, அதில் சம்பாதித்த பணத்தைத் திரைப்படத்தின் வாயிலாகத் திரைப்படத் தயாரிப்புக்கு செலவு செய்திருக்கிறார். இதுதவிர, ஹோட்டல் நடத்துவதற்கு செலவு செய்திருக்கிறார். திமுக நிர்வாகிகளுக்கு பணம் அளித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதுமட்டுமில்லாமல் உதயநிதி அறக்கட்டளைக்கு பணம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல்வேறு அரசியல் தொடர்புடையவர்களுக்கு நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமிராக்களை கொடுத்ததற்காக ஜாஃபர் சாதிக் காவல் துறை தலைவரிடம் நற்சான்றிதழைப் பெற்றுள்ளார்.

முதல்வரைச் சந்தித்து நிதியளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்து நிதியளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். போதைப் பொருள் விற்பனை மூலம் பெற்ற நிதியைப் பயன்படுத்திதான் அந்தப் படத்தைத் தயாரித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

போதைப் பொருளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை தலைவர், முதல்வர் மற்றும் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பல்வேறு வகையில் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும். தமிழகம் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்பட வேண்டும். ஒருதுளிகூட போதைப் பொருள் விற்பனை நடக்காமல் இருப்பதை உறுதி செய்து, அதைத் தடுக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். இதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம்.

போதைப் பொருளில் சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் திமுக தேர்தலை சந்திப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்த மோசமான நிலைக்கு திமுகதான் காரணம். இதற்குத் தார்மீக பொறுப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

2019-ல் மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்தியதாகவும், இதுதொடர்பாக வழக்கு இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆக, பல ஆண்டுகளாக பல்வேறு வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் விற்பனை நடைபெற்று வந்ததாகவும், இதில் வந்த வருமானத்தை வைத்து காவல் துறை உயர் அதிகாரிகள், முதல்வரின் குடும்பத்துக்கு நெருக்கமாக இருப்பதாகக் காட்டி போதைப் பொருளை எளிதாக தமிழ்நாட்டில் விற்பனை செய்திருக்கிறார். இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in