சென்னை மழை வெள்ள பாதிப்பை மக்களின் கவனத்தில் இருந்து திசை திருப்பவே திமுக நாடகத்தில் ஈடுபடுகிறது என்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் விவகாரத்தில் குற்றம்சாட்டியுள்ளார் மத்திய இணையமைச்சர் எல். முருகன்.
இன்று (அக்.19) காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து எல். முருகன் பேசியவை பின்வருமாறு:
`ஹிந்தி வாரம் மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 2004 முதல் 2014 வரையிலான திமுக காங்கிரஸ் கூட்டணியின் பத்து வருட கால மத்திய அரசிலும் இந்த விழாக்கள் தொடர்ந்து நடைபெற்றன. இது ஏதோ இன்றைக்கு நேற்றைக்கு நடக்கும் விழா அல்ல.
தமிழை பாதுகாப்பதிலும் அதை உலகளவில் எடுத்துக்கொண்டு சென்வதிலும் முதன்மையாக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு சிறப்பு இருக்கை அமைத்திருக்கிறோம். திருவள்ளுவருக்கு கலாச்சார மையங்கள் அமைத்திருக்கிறோம். திருக்குறளை 35-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்த்திருக்கிறோம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஐநா சபையில் பேசி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. ஆளுநரின் நிகழ்ச்சியில் குழந்தைகள் தவறு செய்தனர். அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். ஆனால் இதில் ஆளுநரை தொடர்புபடுத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.
அனைத்து விஷயங்களிலும் அரசியல் செய்யக்கூடாது. மழை வெள்ளத்தை திமுக அரசு சரியாக கையாளவில்லை. இதை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர். கொஞ்சம் கூட அடிப்படை யோசனை இன்றி இண்டியா கூட்டணி இந்த விஷயத்தைக் கையாண்டது. ஒரு சிறிய தவறுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் எவ்வாறு பொறுப்பாக முடியும்?
இது 1960-கள் அல்ல, திமுக நினைக்கும் அரசியலை இப்போது செய்ய முடியாது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தாங்கள் நடத்தும் ஹிந்தி மொழிப்பாடம் இருக்கும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை இழுத்து மூட திமுக நிர்வாகிகள் தயாரா? அதை அவர்கள் செய்யமாட்டார்கள். திமுக ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபடவேண்டும்.
சென்னை மழை வெள்ளத்தை மக்களின் கவனத்தில் இருந்து திசை திருப்பவே திமுக நாடகத்தில் ஈடுபடுகிறது' என்றார்.