பேருந்து நிலையத்தைக் கட்ட முடியாத திமுக மைதானத்தைக் கட்டுமா?: அண்ணாமலை

"2021-ல் அறிவிக்கப்பட்ட 511 தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன."
அண்ணாமலை (கோப்புப்படம்)
அண்ணாமலை (கோப்புப்படம்)

கோவையில் 3 ஆண்டுகளாகப் பேருந்து நிலையத்தைக் கட்ட முடியாத திமுக, மைதானத்தைக் கட்டுவதாக வாக்குறுதி அளித்திருப்பது நகைச்சுவையானது என கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைக் கட்டுவது குறித்து மாநில தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா எக்ஸ் தளத்தில் கோரிக்கை வைத்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளோடு கூடுதல் தேர்தல் வாக்குறுதியாக கோவையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வாக்குறுதியளித்தார். சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்துக்கு அடுத்தபடியாக இந்த மைதானம் இருக்கும் என முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, முதல்வர் மு.க. ஸ்டாலினின் வாக்குறுதியைப் பகிர்ந்து நகைச்சுவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது:

"2021-ல் அறிவிக்கப்பட்ட 511 தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளதை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தோல்வி பயத்தில் புதிய வாக்குறுதிகளை அளிப்பதற்கு முன்பு, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

தேர்தல் அறிவிப்புகள் மூலம் கோவையிலுள்ள இளைஞர்களையும், விளையாட்டு ஆர்வலர்களையும் ஏமாற்ற முடியாது. இவர்கள் விழிப்புடன் உள்ளார்கள்.

கோவையில் கடந்த 3 ஆண்டுகளாகப் பேருந்து நிலையத்தைக்கூட கட்ட முடியாத திமுக, இன்று புதிய மைதானத்தைக் கட்டுவதாக வாக்குறுதி அளித்திருப்பது நகைச்சுவையானது" என்று பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in