
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக அடுத்தாண்டு தலைப்புச் செய்தி வர வேண்டும் என அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை உத்தங்குடியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக கொடியை ஏற்றி வைத்து மு.க. ஸ்டாலின் பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் மறைந்த விஜயகாந்த், குமரி அனந்தன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கென புதிய சார்பு அணி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களைக் கொண்ட கல்வியாளர் அணியும் திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் உரையாற்றியதாவது:
"தமிழ்நாட்டு உரிமைகளை நிலைநாட்ட உயரப் பறக்கிறது நம் கருப்பு சிவப்புக் கொடி. திமுகவுக்காக பலர் உழைத்த தியாக பூமியான இந்த மதுரை மண்ணில் திமுக பொதுக்குழு நடப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். திமுக தொடங்கியதிலிருந்து மதுரையில் இது 7-வது பொதுக்குழு. 7-வது முறை திமுக ஆட்சியமைப்பதற்கான அடிகோல் இடும் பொதுக்குழு தான் இந்த 7-வது பொதுக்குழு.
திமுகவினர் தடம் மாறாத கொள்கைக் கூட்டம். அதனால் தான் எந்தக் கோமாளிக் கூட்டத்தால் நம்மை வெல்ல முடியவில்லை, இனியும் வெல்ல முடியாது. இது வழக்கமான பொதுக்குழு அல்ல. 7-வது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கப்படும் பொதுக்குழு.
அடுத்தாண்டு இந்நேரம் 7-வது முறையாக திமுக ஆட்சியமைத்தது என தலைப்புச் செய்தி வந்திருக்கும். திமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது, ஸ்டாலின் தலைமையில் 2-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது என்பது தான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும். இதற்கான வியூகங்களை வகுப்பதற்கு தான் இந்தப் பொதுக்குழுக் கூட்டம்.
நான் மமதையில் பேசுபவன் அல்ல. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என ஆணவத்தில் சொல்பவன் அல்ல. எந்தக் காலத்தில் எனக்கு ஆணவமோ மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரை பணிவு தான் தலைமைப் பண்பின் அடையாளம். சொல்லைவிட செயலே பெரிது. வரலாற்று காணாத வெற்றியைப் பதிவு செய்வோம் என்று செய்வது உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் தான். இங்கு வராத கோடிக்கணக்கான உடன்பிறப்புகளை நம்பிதான் சொல்கிறேன். திமுக இதுவரை அடைந்த வெற்றிகளுக்கு நீங்கள் தான் காரணம். என்னைத் தலைவராக உருவாக்கியது நீங்கள்.
மக்கள் மத்தியில் திமுக அரசுக்கு எதிரான அலையைவிட ஆதரவான அலையை அதிகமாக வீசுகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் உள்ளன. எனவே, வழக்கத்தைவிட திமுகவுக்கு எதிராக திமுக ஆட்சிக்கு எதிராக அவதூறு அம்புகளை மக்கள் மத்தியில் எதிரிகள் வீசுவார்கள். கருத்து கணிப்பு என்ற பெயரில் திமுக கூட்டணிக்கு குறைவான சதவீதத்தையும் அதிமுக கூட்டணிக்குப் புதிதாக வரக்கூடியவர்களுக்கு அதிக வாக்கு சதவீத்தைக் கொடுத்து மக்கள் மத்தியில் அந்தப் பொய்யை விதைக்க முயற்சிப்பார்கள்" என்றார் மு.க. ஸ்டாலின்.