ஏப்ரல் 10-ல் திமுக, அதிமுக ஒன்று சேரும்: அண்ணாமலை

"நாங்கள் சொல்லக்கூடிய மாற்று அரசியல் என்ன..?"
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

கோவை மக்களவைத் தொகுதியில் திமுகவும், அதிமுகவும் ஏப்ரல் 10-ல் ஒன்று சேரும் என பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"கோவை நாடாளுமன்றத் தொகுதியில் நம்முடைய போட்டி என்பது வேட்பாளர்களுடன் கிடையாது.

எங்களுடைய தொண்டர்கள், தலைவர்கள் மக்களைச் சந்தித்து ஒரேயொரு செய்தியைச் சொல்லவிருக்கிறார்கள். 2019-ல் பாஜக தேர்தல் அறிக்கையில் 295 வாக்குறுதிகள் இருக்கும். அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக மாதிரி 2021-ல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதையே மாற்றியமைத்து கொடுப்பது பாஜக கிடையாது. நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு இங்கு நிற்கிறோம்.

பாஜக என்ன செய்துள்ளது, மோடி என்ன செய்துள்ளார் என்பது கோவை மக்கள் அனைவருக்கும் தெரியும். கோவையின் வளர்ச்சி அனைத்தும் பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் நிகழ்ந்தவை.

இங்குள்ள கம்யூனிஸ்ட் எம்.பி. வளர்ச்சி வேண்டாம் என்கிற பிடிவாதத்தில் இருக்கக் கூடியவர். மற்றொரு வேட்பாளர், கமிஷன் வாங்குவதற்காக மட்டுமே பாலங்கள் கட்டக்கூடிய கட்சி. ஊழல் செய்வதற்காக மட்டுமே ஆட்சியில் இருந்த கட்சி, வளர்ச்சியைக் குறித்து பேசுகிறார்கள்.

உங்களுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்புப் பாலமாக மிக வேகமாக வேலைகளைச் செய்து கோவைக்கு உண்மையான வளர்ச்சியைக் கொடுப்பதற்காக இங்கு வேட்பாளராகக் களமிறங்கியுள்ளேன். இரு வேட்பாளர்களுடன், கட்சிகளுடன் சண்டை செய்வதற்காகத் தேர்தலில் போட்டியிடவில்லை.

அதே நேரத்தில் மாற்று அரசியல். பண பலத்தைக் கொண்டு தீர்மானிக்கக்கூடிய அரசியல்தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது. அப்படியிருக்க மக்களை நம்பி ஒரு சாதாரண மனிதர்கள் இந்த அரசியலில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையிலும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறேன்.

நாங்கள் சொல்லக்கூடிய மாற்று அரசியல் என்ன..? எடப்பாடி பழனிசாமி டீ குடிக்க வேண்டுமென்றால்கூட யாரிடமாவது பணம் வாங்கிக்கொண்டுதான் டீ குடிப்பார்போல. அதனால்தான் டீ குடிப்பதை உதாரணமாகச் சொல்கிறார். ஆனால், நாங்கள் டீ குடிப்பதாக இருந்தால்கூட சொந்தப் பணத்தில்தான் டீ குடிப்போம். அதுதான் எங்களுக்கும், அந்தத் தலைவர்களுக்கும், அந்தக் கட்சிக்கும் இருக்கக்கூடிய அடிப்படையான வித்தியாசம்.

ஒரு செங்கல்லைக் கையிலெடுத்து அதைப் பாருங்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்குதான் உதயநிதிக்கு அறிவு உள்ளது. அறிவு இருக்கக்கூடியவர்கள், மக்களுக்கு சமூகப் பணி செய்பவர்கள் அரசியலுக்கு வராமல், தந்தை, தாத்தா பெயரைக் கொண்டு அரசியலுக்கு வந்தால் இப்படிதான் செங்கல்லைக் காட்டக்கூடிய அளவுக்கு அறிவு இருக்கும்.

மதுரையில் வேளாண் கல்லூரி, சிப்காட் கட்டுவோம் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயிற்று. கருணாநிதி குளித்தலையில் கொடுத்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை 2026 முன்பகுதியில் வரும் என்று வாக்குறுதியைக் கொடுத்துள்ளோம். அதை நிறைவேற்றுவோம்.

அதிமுகவும், திமுகவும் ஏப்ரல் 10-ல் ஒன்று சேரும். அவர்கள் ஒன்று சேர்வதைக் கடைசி 10 நாள்களில் எதிர்பார்க்கிறேன். அப்போதுதான் பங்காளி கட்சிகளின் சுயரூபத்தைப் பார்க்க முடியும்.

ஏப்ரல் 10-க்குப் பிறகு கடைசியில் இரு வேட்பாளர்களில் ஒரு வேட்பாளர் விட்டுக்கொடுத்து, வாக்கு மாற்றத்துக்கு முயற்சிப்பார்கள். பல இடங்களில் பார்த்திருந்தாலும், தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவையில் பார்க்கவிருக்கிறோம். இதையும் தாண்டிதான் எங்களுடைய வெற்றி. மக்களுடைய அன்பு இருக்கிறது" என்றார் அண்ணாமலை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in