மதிமுகவுக்கு ஒரு தொகுதி: ஒப்பந்தத்தில் ஸ்டாலின் - வைகோ கையெழுத்து!

"நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்."
வைகோ (கோப்புப்படம்)
வைகோ (கோப்புப்படம்)ANI

திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் திமுக - காங்கிரஸ், திமுக - மதிமுக, திமுக - விசிக இடையிலான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தன. இதைத் தொடர்ந்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது திமுக, மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீடு இறுதியானது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தை மதிமுக கேட்டதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மக்களவைத் தொகுதி குறித்து மட்டுமே தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீடு இறுதியான பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ கூறியதாவது:

"திராவிட இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு எங்களுடைய அனைத்து சக்திகளையும் பயன்படுத்துவோம். நிரந்தரமாக திமுகவுக்குப் பக்கபலமாக இருப்போம் என்று நான் கூறியிருக்கிறேன்.

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று ஏறத்தாழ முடிந்துவிட்டது. எங்களுக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தத் தொகுதி என்பதை மற்ற கட்சிகளுடன் பேசி முடித்துவிட்டு கூறுவதாக உறுதியளித்திருக்கிறார்கள். நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படுவது குறித்து தற்போது எதுவும் பேசவில்லை. இன்னும் 15 மாதங்கள் இருப்பதால், பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். 2019-ல் ஒப்பந்தம் கையெழுத்தானபோது மாநிலங்களவைத் தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே இருந்தது. அதனால், அப்போதைய ஒப்பந்தத்தின்போது மாநிலங்களவைக்கான இடம் குறித்தும் முடிவு செய்யப்பட்டது. தற்போது, மாநிலங்களவைத் தேர்தலுக்கு 15 மாதங்கள் இருப்பதால் உரிய நேரத்தில் வந்து பேசுவோம்.

தொகுதி உடன்பாட்டைப் பொறுத்தவரை நாங்கள் அனைவரும் மனநிறைவுடனே உள்ளோம்" என்றார் வைகோ.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in