

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றான சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி வரும் டிசம்பர் 24 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மாற்றாக விக்சித் பாரத் - கேரன்டி ஃபார் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா (விபி ஜி ராம் ஜி) என்ற சட்ட மசோதா நேற்று (டிச. 18) பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உள்ள 100 நாள் வேலையை 125 நாள்களாக உயர்த்தப்படவுள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கான ஊதியத்தின் மொத்தச் செலவில் 40% மாநில அரசும் 60% மத்திய அரசும் ஏற்கும் நடைமுறை ஏற்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து, இந்த நடைமுறை மூலம் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதாகவும், மாநிலங்களின் நிதிச்சுமை அதிகரிப்பதாகவும் குற்றம்சாட்டி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இத்திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் டிசம்பர் 24 அன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து திட்டத்தை முடக்குவது, வேலைநாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, 'கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு' என்ற அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என சட்டத்தை திருத்தியும் - நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் அடிக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் நாசகார சதிச் செயலையும் - அதற்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் அதிமுகவையும் கண்டித்தும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் டிசம்பர் 24 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில், தலைநகர் சென்னையிலும் - மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்பினால் பயன்பெறுவோரைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் மத்திய பாசிச பாஜக அரசையும் - ஒத்து ஊதும் அதிமுகவைக் கண்டித்தும் முழக்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது
The DMK-led Alliance has announced that a protest demonstration will be held across the state on the 24th, demanding the withdrawal VB G RAM G that replaces MGNREGA