திமுக பவள விழா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் செப்டம்பர் 28 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.
திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேற்று நடைபெற்றது. திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருப்பதாக கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மூத்த நிர்வாகிகளோடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்குப் பிறகு, திமுக பவள விழா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்பை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் செப்டம்பர் 28-ல் இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலையில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்துக்குப் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆசிரியர் கி. வீரமணி, செல்வப்பெருந்தகை, வைகோ, பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன், ஜவாஹிருல்லா, திருமாவளவன், கமல்ஹாசன், வேல்முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை ஆற்றுகிறார்கள்.