அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்)
அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்)

சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து நவ.11-ல் ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு | SIR | DMK Alliance |

தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது...
Published on

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வரும் நவம்பர் 11 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நவம்பர் 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கடந்த அக்டோபர் 27 அன்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதனை எதிர்த்து திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

“திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை!

நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் சிறப்பு தீவிர திருத்தத்திற்குத் தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு, தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளது.

சிறுபான்மையினர் வாக்குகள், பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து நீக்கும் நோக்கோடு – தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்க்கும் சதித் திட்டத்தோடு மத்திய பாஜக அரசை தனக்குப் பாதுகாவலாக வைத்துக் கொண்டு, தேர்தல் ஆணையம் இதனைச் செய்திட முயன்றிருப்பதோடு, பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழி தோண்டி புதைப்பதாகவும் உள்ளது. அத்துடன் தேர்தல் ஆணையத்தின் அவசரமே அதிக சந்தேகத்தை எழுப்புகிறது.

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலமான, கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படும் காலத்தில் தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலோர் கிராமப்புற மக்களாக - விவசாயிகளாக இருப்பதால், கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர். அதோடு, வருவாய்த் துறையும் கனமழையால் எழும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஈடுபட வேண்டும். எனவே, இந்த காலம் கணக்கீட்டுக்கு உகந்த காலம் இல்லை என்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் தனித்தனியே அறிக்கை விடுத்தும், அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல எனவே, சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும், அதனை செவிமடுக்காத மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி, எதேச்சாதிகாரப் போக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளதை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகிற நவம்பர் 11 அன்று காலை 10.00 மணியளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

DMK Alliance parties announced a massive protest demonstration in all districts on November 11 against Special Intensive Revision works started in Tamil Nadu.

logo
Kizhakku News
kizhakkunews.in