

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 17%-ல் இருந்து 22% ஆக குறைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். மேலும் இதனை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் வலியுறுத்தி வந்தார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 25 அன்று நெல்லின் ஈரப்பத அளவைத் தளர்த்துவது குறித்து செய்ய மத்திய அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். ஆனால் இன்னும் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
இதற்கிடையில் கடந்த நவம்பர் 19 அன்று கோவை வந்த பிரதமர் மோடிக்கு இது தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவு ஒன்றை வெளியிட்டார். பின்னர் நேற்று (நவ. 20) தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது என்று குற்றம்சாட்டினார். இந்நிலையில், நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல் இருக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து திமுகவின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில் குறிப்பிடுள்ளதாவது:-
நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல், நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி’களின் சார்பில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது மத்திய பாஜக அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை. கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனைச் செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு மத்திய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் நவம்பர் 23 அன்று தஞ்சாவூரிலும், நவம்பர் 24 அன்று திருவாரூரிலும் காலை 10 மணியளவில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
DMK-led alliance parties have announced that they will hold a protest against the central BJP government for not increasing the moisture content of paddy.