சென்னை மாடல் குறித்து கற்றுக்கொள்ள வந்துள்ளோம்: கர்நாடக துணை முதல்வர்

"நாங்களும் சில முன்னெடுப்புகளைச் செய்துள்ளோம். இருந்தபோதிலும், கற்றுக்கொள்ள இன்னும் நிறைய உள்ளன."
சென்னை மாடல் குறித்து கற்றுக்கொள்ள வந்துள்ளோம்: கர்நாடக துணை முதல்வர்
படம்: https://x.com/chennaicorp
1 min read

திடக் கழிவு மேலாண்மை, சிஎன்ஜி எரிவாயு உற்பத்தியில் சென்னை சிறப்பாக விளங்கி வருவதாகவும், சென்னை மாடல் குறித்து கற்றுக்கொள்வதற்காக சென்னை வந்துள்ளதாகவும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் கடைபிடிக்கப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை, சிஎன்ஜி எரிவாயு உற்பத்தி குறித்து ஆய்வு செய்து கற்றுக்கொள்வதற்காக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தலைமையிலான குழு சென்னை வந்தது. சென்னையில் டிகே சிவக்குமார் தலைமையிலான குழு மாதவரம் மண்டலம், மாதவரம் உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தையும், அண்ணாநகர் மண்டலம், சேத்துப்பட்டில் உள்ள ஈரக்கழிவுகளிலிருந்து இயற்கை உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தையும், ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் கண்காணிப்பு அறையில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்கள்.

சென்னை வந்தது பற்றி டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"திடக் கழிவு மேலாண்மை குறித்தும் சிஎன்ஜி எரிவாயு எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்வதற்காக 15 அதிகாரிகள் கொண்ட குழுவினருடன் சென்னை வந்தேன். சென்னையை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கான வசதிகள் மிக அற்புதமாக உள்ளன.

அரசு மற்றும் ஒட்டுமொத்த குழுவையும் பாராட்டுகிறேன். இவர்கள் வேறொரு முறையில் அணுகுகிறார்கள். எங்களுக்கு இது மிகவும் நல்ல பாடம். நாங்களும் சில முன்னெடுப்புகளைச் செய்துள்ளோம். இருந்தபோதிலும், கற்றுக்கொள்ள இன்னும் நிறைய உள்ளன.

எனவே, சென்னை வந்தோம். இதைக் கற்றுக்கொள்ள சென்னையும் ஒரு மாடல். எனவே, சென்னை மாடல் குறித்து கற்றுக்கொள்வதற்காக இங்கு வந்துள்ளேன்" என்றார் டி.கே. சிவக்குமார்.

இதைத் தொடர்ந்து, ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் டி.கே. சிவக்குமார் கலந்துகொண்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in