அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை.
2011 முதல் 2016 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார் ஆர். வைத்திலிங்கம். அமைச்சராக இருந்த இந்த 5 வருட காலகட்டத்தில் 1058 % வருமானத்துக்கு அதிகமாக வைத்திலிங்கம் சொத்து சேர்த்ததாக அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை.
சில தினங்களுக்கு முன்பு, வைத்திலிங்கம் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் மனு அளித்தது அறப்போர் இயக்கம்.
அந்த மனுவில், 2013-ல் ஸ்ரீராம் குழுமத்தின் ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் அண்ட இன்ஃப்ராஸ்டிரக்சர் நிறுவனம் சார்பில் தாம்பரத்தை அடுத்து உள்ள பெருங்களத்தூரில், 57 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதியைப் பெற, ஸ்ரீராம் குழுமத்தின் பாரத் கோல் கெமிக்கல் நிறுவனத்தின் மூலம் அப்போது வீட்டுவசதி அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூ. 27 கோடி லஞ்சம் கைமாறியதாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், லஞ்சமாக பெற்ற பணத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பாகுறிச்சியில் ரூ. 24 கோடி மதிப்பிலான நிலத்தை வைத்திலிங்கம் வாங்கியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டது அறப்போர் இயக்கம்.
இதனைத் தொடர்ந்து கடந்த செப்.19-ல், முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் அண்ட இன்ஃப்ராஸ்டிரக்சர் நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு மற்றும் சண்முக பிரபு உள்ளிட்ட 11 நபர்கள் மீது 1988 ஊழல் தடுப்புத் தடைச் சட்டப்பிரிவுகள் 7, 12, 13 (2), 13 (1)(d) மற்றும் பாரதீய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 120B ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை.