
நாளை (ஜூலை 9) நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து நாளை (ஜூலை 9) நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 10 முக்கிய மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதைக் கைவிடுதல், ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், தொழிலாளர்களை வஞ்சிக்கும் 4 சட்ட தொகுப்புகளைத் திரும்பப்பெறுதல் போன்ற 17 அம்ச கோரிக்கைகளை மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.
இந்த வேலை நிறுத்தத்திற்கு மாநில அளவில் செயல்படும் தொமுச, மறுமலர்ச்சி தொழிலாளர்கள் முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அதிமுகவின் அங்கமான அண்ணா தொழிற்சங்கப் பேரவை அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக அனைத்து அரசுத் துறைகளின் செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
நாளை (ஜூலை 9) நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, சம்பளம் பிடித்தமும் செய்யப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், நாளைய (ஜூலை 9) தினத்தின் வருகைப் பதிவேட்டை தலைமைச் செயலகத்தில் செயல்படும் அனைத்துத் துறைகள், துறைகளின் கீழ் மாநில முழுவதும் செயல்படும் அலுவலகங்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் ஆகியவை மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப சுற்றிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.