சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆன்மீகப் பேச்சாளர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவர், மறு பிறவி, முற்பிறவிகளில் செய்யும் பாவ புண்ணியங்கள் போன்றவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு அந்தப் பள்ளியில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர் என்பவர் ஆட்சேபம் தெரிவித்தார். இதை அடுத்து ஆசிரியர் சங்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார் பேச்சாளர் மகாவிஷ்ணு. இந்தக் காணொளி நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது.
இதைத் தொடர்ந்து, `முன்ஜென்ம பாவ, புண்ணியத்தால்தான் மனிதர்கள் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என மகாவிஷ்ணு பேசியதை எங்களுக்கு எதிரான வன்செயலாகக் கருதுகிறோம்’ என்று கூறி அவருக்கு எதிராக வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.
மேலும் மகாவிஷ்ணுவுக்குச் சொந்தமாக திருப்பூர் மாவட்டம் குளத்துப்பாளையத்தில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை மையத்தில் திருப்பூர் மாவட்டக் காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றதாக அறக்கட்டளையில் உள்ள நபர்கள் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.