
கரூர் துயரச் சம்பவம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மறுத்துள்ளார்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து பல்வேறு தரப்புகளில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் அரசு உட்பட பல்வேறு தரப்பிலிருந்து ஆறுதல் கூறப்பட்டதுடன் நிவாரண நிதியும் வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம், மத்திய அரசு தரப்பில் ரூ. 2 லட்சம், தவெக விஜய் தரப்பில் ரூ. 20 லட்சம், பாஜக தரப்பில் ரூ. 1 லட்சம், காங்கிரஸ் தரப்பில் ரூ. 2.5 லட்சம் என இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சம்பவம் நடந்து 3 நாள்களுக்குப் பின் காணொளி ஒன்றை வெளியிட்ட தவெக தலைவர் விஜய், மனது முழுவதும் வலியுடன் இருப்பதாகவும், என்ன சொன்னாலும் இழப்பை ஈடுகட்ட முடியாது என்றும் உருக்கமாகப் பேசியிருந்தார். அத்துடன், பழிவாங்குவதாக இருந்தால் தன்னைக் கைது செய்யவும் என்றும் அரசைச் சீண்டியிருந்தார்.
இச்சம்பவம் குறித்து தவெக பொதுச்செயலாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். மற்றவர்களைக் கைது செய்ய காவல்துறை தனிப்படைகளை அமைத்து தேடி வருகிறது.
இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது கரூர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சங்கடத்துடன் ”ஏற்கெனவே மனக் கஷ்டத்தில் இருக்கிறோம். எந்த நேரத்தில் எதைக் கேட்கிறீர்கள்?” என்று கேள்விக்குப் பதிலளிக்காமல் எஸ்.ஏ.சி. அங்கிருந்து காரில் புறப்பட்டார்.